Pages

Monday, July 27, 2009

தமிழன்னை பூங்கா - கன்னியாகுமரி

காமராஜர் மண்டபத்தின் எதிரே கடலைப் பார்த்தபடி அமைக்கப்பட்ட சிறிய பூங்கா. 5 ரூபாய் கட்டணம். நன்றாகப் பராமரிக்கிறார்கள். விசாரித்ததில் 10 வருடங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டது என்றார்கள். மலர்களும், சிலைகளும் அழகு.

பூங்காவில் அமர்ந்து கடலையும், மண்டபங்களையும் பார்ப்பது இன்பம். படங்களே அனைத்தையும் சொல்லும்.


Sunday, July 26, 2009

மேற்கிந்தியத்தீவுகளின் வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சைத் தனது அலங்காரமாகவும், அடையாளமாகவும் கொண்டிருந்தது மேற்கிந்தியத்தீவுகள். 1928 ல் முதல் டெஸ்ட். குரல்வளையைக் குறிவைக்கும் வேகப்பந்துக் கூட்டணி ஆரம்பித்தது 50 களுக்குப் பிறகுதான். வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்த பார்வை. (ஸ்பின் தனி இடுகையாக விரைவில்!)

WESLEY HALL: விக்கெட் கீப்பராகத் தொடங்கி, வேகப்பந்து வீச்சாளரானார். 30 முதல் 35 அடிகள் கொண்ட Long Run-up! நீண்ட நேரம் பந்துவீசும் ஆற்றலுள்ளவர். Tied Test Match ன் கடைசி ஓவரைத் திறமையாகப், பதட்டமின்றி வீசியவர் ஹால். 

60 களில் சரியாகத் திட்டமிடாத காரணங்களால் டெஸ்ட் போட்டிகள் குறைவாகவே நடத்தப்பட்டது. நல்ல உடல்தகுதியும், ஆற்றலும் இருந்தும் ஹால்  விளையாடியது வெறும் 48 போட்டிகளே! 192 விக்கெட்டுகள் சாய்த்தார். 1960 ல் இங்கிலாந்து அணிக்கெதிராக 7/69, வேகப்பந்துவீச்சுக்கு இலக்கணம். ஹாட்ரிக் எடுத்த முதல் வெஸ்ட் இண்டியன் ஹால்!  

ஓய்வுக்குப் பின்னும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்குப் பல சேவைகள் இன்றும் செய்து வருபவர். அனைவராலும் மதிக்கப்படும் வீரராகத் திகழ்கிறார் ஹால். 

இவரோடு இணைந்து அசத்தியவர் Charles Griffith. வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்துக் கூட்டணிக்கு முன்னோடிகள் இவர்கள்.
Charles Griffith: ஸ்பின்னராகத் துவக்கினார் கிரிக்கெட் வாழ்வை என்பதை நம்ப முடியவேயில்லை இவரது ஆக்ரோஷமான, துல்லியமான பௌன்ஸர்களைப் பார்க்கும்போது! 1960 முதல் 1969 வரை மேற்கிந்தியத்தீவுகளின் பவுன்ஸர் மன்னன்.


Nari Contractor, துடிப்பான இந்திய பேட்ஸ்மேன். Griffith வீசிய பவுன்ஸர் அவர் கிரிக்கெட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 2 ஆபரேஷன்களுக்குப் பிறகு காயம் ஆறினாலும், அதன்பிறகு காண்ட்ராக்டர் எந்த டெஸ்டிலும் விளையாடவில்லை!Wisden Cricketer of the year விருது 1964ல் பெற்றார் Griffith. வெறும் 28 டெஸ்ட்டில் பங்கேற்று 92 விக்கெட்டுகள். குறைவான போட்டிகளிலும் தனது முத்திரையைச் சிறப்பாகப் பதித்தவர் Griffith. 

இன்னும் பல பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவராக விரைவில் சந்திப்போம். (ஹெல்மெட் அணிந்து கொண்டு படிக்கவும்!).  

Friday, July 24, 2009

அருங்காட்சியகம் - நாகர்கோயில்

பத்மநாபபுரம் பற்றிய கடந்த இடுகையில் சில படங்கள் விட்டுப்போயிற்று. அவைகளையும், அரண்மனையிலுள்ள அருங்காட்சியகத்தின் படங்களையும், தகவல்களையும் தந்திருக்கிறேன்.
அருங்காட்சியகம்: சிற்பக்கலையின் பழமையும், பெருமையும் காணக்கிடைக்கிற  அருங்காட்சியகம். நிர்வகிப்பது கேரள அரசாங்கம். சோழர்களின் அளவிற்கு இல்லாவிட்டாலும் சிற்பங்கள் எளிமையால் கவர்கின்றன. கி.பி 10 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது சிற்பங்களின் வயது.

இங்குள்ள சேட்டை மற்றும் ஏழு கன்னியர் சிற்பங்கள் 10 ஆம் நூற்றாண்டு. சிற்ப வழிபாடு இங்கும் சிறப்பாக இருந்திருக்கிறது. கற்சிற்பங்கள் கி.பி 9 முதல் 18 ஆம் நூற்றாண்டையும், மரச்சிற்பங்கள் கி.பி 17 முதல் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இருக்கும் சிற்பங்களில் குறிப்பிடத் தகுந்தவை: சேட்டை, திருமால், பிரம்மன், த்ட்சிணாமூர்த்தி மற்றும் பாலசுப்ரமணியன். கிராமதேவதை மற்றும் மரத்தால் ஆன கோயில் ரதம், வாசல்காப்போன் ஆகியவை. இவை கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் 18 வரை பல்வேறு காலத்தைச் சேர்ந்தவை.

ஓலைச்சுவடிகள், கேரள வரலாற்றை விவரிக்கும் ஓவியங்கள், பண்டைய நாணயங்கள், ஆயுதங்கள் ஆகியவை சிறப்பாகத் தொகுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடாமல் பார்க்கும்வரை நமக்கும், கலைப்பொருட்களுக்கும்  பாதிப்பில்லை ! 


மொத்தப் படங்களையும் எடுத்து முடிக்க 3 மணி நேரமாயிற்று.தூய்மையான அருங்காட்சியகம். சிறப்பாகப் பராமரிக்கும் கேரள அரசுக்கு நன்றியும், வாழ்த்துக்களும். செருப்பு வைக்கும் இடத்திலிருக்கும் குழந்தைத் தொழிலாளரை நீக்கினால் மகிழ்வேன். அவசரமாய்ச் செல்லாமல், நிதானமாய் வாழ்வின் அரைநாளைத் தியாகம் செய்து காண வேண்டிய இடம்.