இன்று உலகத் தண்ணீர் தினம். பூமியில் இருக்கும் நீரில் ஒரு சதவிகிதம்தான் பயன்பாட்டுக்கு உகந்தது. தண்ணீரின் அவசியம் வருடத்தில் பெரும்பாலான மாதங்கள் வெப்பத்தில் வாழும் சென்னை மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், நமது அலட்சியத்தால் நீர் வீணாவது நிற்பதில்லை. நீரைப் பற்றி அறியும்போது அலட்சியம் குறைய வாய்ப்பிருக்கிறது. எனது அலட்சியம் நிச்சயமாகக் குறைந்திருக்கிறது. இன்னும் திருந்த வேண்டும்!
இந்தியாவின் நீர் ஆதாரங்கள் குறைந்துவருகின்றன. நிலத்தடி வளமும் இன்னும் கொஞ்சகாலத்துக்குத்தான். நிறைய நதிகளையும், ஆறுகளையும், குளங்களையும் இழந்துவிட்டோம். ஏரிக்குள் வீடுகட்டுகிறோம். கோடையில் ஆற்று மணல்களைத் திருடுகிறோம்.எப்போது நிறுத்துவோம்? ஆறுகள் அழிந்த பிறகா?
எதற்கு வேண்டுமானாலும் மாற்று உபாயம் தேடிக் கொள்ளலாம். நீருக்கு மாற்று நிச்சயம் பெப்ஸியும், கோக்கும் அல்ல! நீர் மேலாண்மை நிச்சயம் தேவைப்படுகிறது. நம் அனைவருக்கும் இதில் பங்கு இருக்கிறது. முறையாகப் பயன்படுத்தப் பழகிவிட்டால், ஆற்றுநீருக்காக அரசியலை எதிர்பார்க்கத் தேவையில்லை.
காலையில் குழாயைத் திறந்து சரியாக மூடுவதில் தொடங்குகிறது மேலாண்மை. ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக 110 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தேவைக்கேற்ப இன்னும் அதிகமாகத் தேவைப்படலாம். எவ்வளவு சிக்கனமாகவும், சிறப்பாகவும் நீரைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து மூன்றாம் உலகப் போரைத் தவிர்க்கலாம்!
சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்துவதும், கிடைப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதும் உலகத் தண்ணீர் தினத்தின் குறிக்கோள்கள். இன்னும் நிறையத் தகவல்கள் உள்ளன இந்த அழகான தளத்தில்! http://www.worldwaterday2010.info/ அடுத்தமுறை குழாயைத் திறப்பதற்கு முன்னால் ஒருகுடம் நீருக்காகப் பல கிலோமீட்டர்கள் நடந்து செல்லும் மக்களை நினைத்துப் பார்ப்போம்!



0 கருத்துக்கள்:
Post a Comment