அவன், 30 ஐத் தாண்டிய, IT நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் நிம்மதியாக வாழும் இளைஞன். கடின உழைப்பாளி. திடீரென்று அலுவலகத்துக்கு வருவதை நிறுத்திவிட்டான். காரணம், அலுவலகத்தில் சாதாரணக் கேலிகளைத் தாங்கும் பக்குவமில்லாதவன் (Emotionally Underdeveloped) என்பது!
எங்கோ, எவனுக்கோ நடக்கும் விஷயம் என்று ஒதுங்காமல் மேற்கொண்டு வாசியுங்கள் நண்பர்களே! உளவியல் நிபுணர்கள் இதை Mid-Life Crisis என்கிறார்கள். 30 வயதுக்கு மேற்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று பயமுறுத்துகிறது புள்ளிவிவரம்!
நீண்டநேர உழைப்பு, அபரிமிதமான வளர்ச்சி, பொருளாதாரம் சார்ந்த இலக்குகளை விரைவில் எட்டுவது என சம்பவங்கள் நிறைந்த வாழ்வு. இத்தனையும் 30 வயதுக்குள்! இவற்றை சாதிப்பவர்கள், தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகள், மக்களை அணுகும்முறையில் தடுமாறுகிறார்கள்.
40 வயதில் வரும் Mid-Life Crisis, இப்போது முப்பதிலேயே ! காரணம், நாற்பதுக்கு உண்டான அனுபவங்கள் முப்பதிலேயே கிடைத்துவிடுகிறது. அடைய முடியாத இலக்குகளை நிர்ணயிப்பது, தங்களைத் தாங்களே தேவையில்லாமல் வருத்திக் கொள்வது இவை இளைஞனின் கட்டுப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தகர்க்கிறது.
நல்ல இசை கேட்கலாம்; இயற்கையை, மனிதர்களை ரசிக்கப் பழகலாம்; சிறந்த நூல்களைத் தேடி வாசிக்கலாம்; எழில் பிரதேசங்களுக்குப் பயணிக்கலாம். இவை முழுமையான தீர்வில்லை. தன்னையறிந்து, சூழலுக்கேற்பத் திட்டம் வகுப்பது, மனிதர்களை மதிப்பது, மதிக்கும்படி நடந்து கொள்வது இவை கண்டிப்பாக நம்மை இயல்பான, நிம்மதியான மனிதனாக்கும்.
நல்லவேளை ! எனக்கின்னும் 30 ஆகவில்லை !














