6 மணிக்குப் பதிவர் சந்திப்பு. அவசரமாகப் போனால் அனைவரும் தேநீர்க் கடையில்! நண்பர் KRP செந்திலின் தேநீர் உபசரிப்பு. LK, மற்றும் சில நண்பர்கள் (பெயர் மறந்துவிட்டது.) இருந்தார்கள். உண்மையான சந்திப்பு நடந்த Discovery Book Palace க்கு சென்றோம். (பக்கத்தில் டீக்கடை இருப்பதால்தான் அடிக்கடி இங்கு சந்திப்பு என்றார் செந்தில்!)
சுரேகா சுவையாகத் தொடங்கினார். கைதட்டாதவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்றார். (பதிவர் சந்திப்பா? சபிப்பா?) இயக்குனர் சீனு ராமசாமியை அறிமுகப்படுத்தினார். பதிவர்களின் சுய அறிமுகமும் நடந்தது. இயக்குனரின் பேச்சு அட்டகாசம். தென்மேற்குப் பருவக்காற்று படம் வெற்றி பெற்றதற்கு வலைப்பதிவர்கள் முக்கியமான காரணம் என்று தொடங்கினார் இயக்குனர் சீனு ராமசாமி. தமிழ் சினிமாவின் இன்றைய நிலையையும், தான் கடந்து வந்த கஷ்டங்களையும் தெளிவாகச் சொன்னர். குறிப்பாக, சிறிய படங்களுக்குத் தியேட்டர் கிடைப்பதில்லை என்ற போது அதன் பின்னணி அரசியலை நினைத்துப் பதிவர்கள் புன்னகைத்தனர்.
என்னால் அனைத்துக் காரணங்களையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்று அவர் சொன்னபோதும் காரணங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. ரசிகர்களில் பலர் முதலில் ஒரு படத்தை இயக்குனரின் பார்வையில் அடுத்து துணை இயக்குநரின் பார்வையில் அடுத்து தயாரிப்பாளரின் பார்வையில் பார்க்கிறார்கள் என்றார். இறுதியாக வலைப்பதிவர்கள் எழுத்தாளர்களாக மாற வேண்டும் என்றார். மொத்தத்தில் தரமான பேச்சு.
கேள்வி நேரத்தில், குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க முடியுமா என்ற கேள்விக்கு தற்கால சினிமாவில் சாத்தியமில்லை என்றார் சீனு ராமசாமி. (கல்யாண வீடியோவிற்கே 3 லட்சம் செலவாகிறது என்றார் பதிவர் ஒருவர்!).
அடுத்து பேசியவர் சிங்கப்பூர் பதிவர் ஜோசஃப். இருதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிவர்கள் தந்த பல லட்சங்களைப் பற்றிப் பேசினார். பெருமையும், நெகிழ்ச்சியுமாக இருந்தது. குழுமத்தின் அவசியத்தை வலியுறுத்தும் போது சிங்கப்பூரில் பதிவர்களின் கருத்தைத்தான் தாக்குவோமே தவிர, பதிவர்களை அல்ல என்றார். ஆழமான கருத்து.
குழுமம் தேவை என்பதைப் பரவலாக அனைவரும் ஒத்துக் கொண்டது நிறைவாக இருந்தது. அவசரத்தில் நண்பர்களிடம் சொல்லாமலே புறப்பட நேர்ந்தது வருத்தம். மொத்தத்தில் ஒரு இனிமையான பதிவர் சந்திப்பு.
டிஸ்கி: Discovery Book Palace ன் உரிமையாளர் நண்பர் வேடியப்பன், தனது தளத்தின் Online Book Purchase Link ஐத் தங்கள் வலைப்பூவில் இணைத்து ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொண்டார். விரைவில் இணைக்கிறேன். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!!

1 கருத்துக்கள்:
வாழ்த்துகள்.
Post a Comment