Pages

Wednesday, November 30, 2011

ராமானுஜ காவியம் - கவிஞர் வாலி

திரைத் தொடர்பு உள்ளபோதும் தனது இறைத்தொடர்பைப் பேணுபவர் கவிஞர் வாலி என்பதற்கு இன்னுமொரு உதாரணம் “ராமானுஜ காவியம்”. ரஜினிக்கும் பாட்டு, ராமானுஜனுக்கும் காவியம் என்பது வாலியின் பேனாவுக்கு மட்டும் வாய்த்த வரம் !

ராமானுஜர், 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ மகான். இறைவன் அய்யருக்கு மட்டுமல்ல; அனைவர்க்கும் என்று கோபுரமேறித் தீர்க்கமாகத் தெரிவித்தவர். 120 வருடங்கள் வாழ்ந்து வைணவ மார்க்கத்தை அனைவருக்கும் அறிவித்தவர்.

ராமானுஜரின் வாழ்வும், வாக்கும் வசன கவிதையாகக் கவிஞரின் தனித் தமிழில் மிளிர்கிறது. இனி, புத்தகத்திலிருந்து சில முத்துக்கள்!
காவியத் தலைவன்.

பாவேந்தன்
பாரதிதாசன்
பாட்டில் வைத்துப்
பரவிய...

எதிராஜன் -
எனப்படும் ராமானுஜன்தான்...
அற்றை நாளில் -
அதுகாறும்...

தனியார் துறைக்குத்
தாரை வார்த்த முக்தியை -
பொதுத் துறைக்குப்
பெயர்த்து வந்தவன்;உய்வழி -
பேசிய மறைகளைப்
பெட்டியில் மறைக்காது -
தேசிய மயமாக்கி
தேசத்தவர்க்குத் தந்தவன் !

இவன்
இயற்றிய
சமயப் புரட்சி - ஓர்
இமயப் புரட்சி !
அரிசனம்;
அயல்சனம்; இரண்டும் -
சரிசனம் - என
சாதித்தது இவன் தராசு;
உடனே -
உறுமியது வைதிக மிராசு !

வர்ணங்கள் நான்கால்
வரையப் பெற்றிருந்த -
மன்பதை -
என்பதை...

ஒரே வர்ணத்தால் - இவன்
ஒஹோவென வரைந்தான்;
வழக்கம்போல் -
வைதிகன் இரைந்தான் !

இவன் -
கீழ்சாதிமேல் கைபோட்ட
மேல்சாதி; இதனை -
முதன் முதல் செய்த
முப்புரி நூல்சாதி !

தீண்டாமையைத் -
தீண்டியே கொன்றான்;
நிற்க -
நிழலற்ற...
சாயச் -
சுவரற்ற...

தெருக்குலத்தார் தம்மைத் -
திருக்குலத்தார் என்றான் !

இது மட்டுமா விந்தை?
இன்னும் இயற்றினான்
எந்தை !

காமக்கிரியை புரியும்
கணிகையர்குலப் பெண்ணுக்கு -
ஈமக்கிரியை புரிந்தான்;

புள்ளினம் யாவிற்கும்
பறந்திட இடங்கொடுக்கும் -
வெள்ளிவானாய் விரிந்தான் !

ஈர மனத்தவன்; ஈ எனாமலே -
ஈயும் இனத்தவன் !

இருக்கும் நீரெலாம் -
இரக்கும் நிலத்திற்கீந்து -
இறக்கும் மேகமும் -
இவனும் ஒன்று;
நரகம் வருமென -
நன்கு தெரிந்தும்...

ஓதற் கரிய
ஒரு மந்திரத்தை - ஊர் உய்ய

ஓதினான் கோபுர
உச்சியில் நின்று !

இது மட்டுமா விந்தை?
இன்னும் இயற்றினான் எந்தை !

முக்கா டிடுகின்ற -
முகமதியப் பெண்ணுக்கு -
நிக்கா முடித்தான் -
நாராயண னோடு;

அரங்கன்பால் -
அவளுக் கிருந்த...
அலுக்க வொண்ணாத
அன்பைக் கண்டு - அவளைத்
துலுக்க நாச்சியாய்த்
துதிக்கிறது நாடு !

ஆக -
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே...
மதப்புரட்சி செய்த
மகான்;
இவன் கைக்குள்
இருந்தது -
சண்டித்தனம் செய்த
சனாதனக் குதிரையின் லகான் !

இருபதாம் நூற்றாண்டின் - இரு
இணையற்ற சிந்தனையாளரோடு...

உவமித்து ராமானுஜனை -
உரைக்கப் போயின்...

பூணூல் -
போட்டிருந்த -
பெரியார் எனலாம்; திருமண் -
ஆறிரண்டு -
அணிந்திருந்த -
அம்பேத்கர் எனலாம் !
---------------------------------------------

மற்ற முத்துக்களை அள்ளிக்கொள்ள நூல்கடலில் முத்துக்குளிக்கவும்!

ராமானுஜ காவியம்.
கவிஞர் வாலி.
வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை - 600 017.
+91 44 24342810 / +91 44 2431 0769
விலை: 150 ரூபாய்

தமிழ் பேசும் அனைவரையும் தமிழன்னை அரவணைக்கிறாள். வாலியை மட்டும் ஆசீர்வதிக்கிறாள்! அற்புதமான தமிழில் துள்ளி விளையாடும் எதுகை, மோனைகளோடு காவியம் தந்த கவிஞருக்கு மனமார்ந்த நன்றிகள்! வாலி,  நீடூழி வாழி!
2 comments:

 1. வாலி .. இன்றும் வாலிபர்தான்

  ReplyDelete
 2. அருமையான தொகுப்பு ...
  அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
  நம்ம தளத்தில்:
  "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

  ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!