Pages

Tuesday, March 13, 2012

கள்ளப்பிரான் - ஸ்ரீவைகுண்டம்.

ஒன்பது திருப்பதிகள் அல்லது நவ திருப்பதிகள் எனப்படும் ஒன்பது திருமால் கோவில்கள் தாமிரபரணி தழுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.  திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், 25 கிலோ மீட்டர் தொலைவில், தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ளது கள்ளப்பிரான் (வைகுந்தநாதன்) கோவில். வெளியில் இருந்து பார்த்தால் ஆலயம் சிறியதாகத் தோன்றும். உள்ளே செல்லச் செல்ல ஆலயத்தின் நீளமும், சுற்றுக்களும், சிற்பங்களும், தூண்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! 


திருடனோடு கூட்டணி அமைத்த திருமால்! ஒவ்வொரு ஆலயத்திற்கும் சுவையான வரலாறு உண்டு. இந்த வரலாறு வசீகரமானது. காலதூஷகன், திருடன். ”தொழிலுக்குப்” போகும்போது இங்குள்ள பெருமாளை வணங்கிச் செல்வது வழக்கம். திருடிய செல்வத்தில் பாதி பெருமாளுக்கு! அரண்மனையில் பிடிபட்டான். பெருமாளிடம் காப்பாற்றுமாறு சரணடைகிறான். 

பெருமாள் திருடன் வேடத்தில்! அரசன் விசாரிக்கிறான். அப்போது கள்ளப்பிரான் (வைகுந்தப் பெருமாள்) அவர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். அரசரிடம், ”வயிற்றுக்கு இல்லாத குறைதான் திருடினேன். நாட்டில் ஒருவனுக்கு உணவு, பொருள் பற்றாக்குறை என்றால் அதற்கு, நாட்டை ஆளும் மன்னன் சரியாக அரசாளவில்லை என்றுதான் அர்த்தம். எனவே, தான் திருடியதற்கு மன்னனே காரணம்” என்று துணிச்சலாகத் தெரிவிக்கிறார். 

மன்னன் அதிர்கிறான். பின் அறிகிறான், பேசுவது திருடன் அல்ல; பெருமாள் என்று! தன் தவறை உணர்கிறான். கள்ளனாய்த் தோன்றினாலும், யாவரையும் கவர்ந்ததால் கள்ளப்பிரான் (கள்ளர்பிரான்) என்ற பெயர்!

ஆலயத்து சிற்பங்களின் எழிலைப் புகைப்படங்களில் காணலாம். (எனது அறிவுக்கு எட்டியவரை எடுத்திருக்கிறேன்! குறைகளைத் தயக்கமின்றித் தெரிவிக்கலாம்!) ஆலயத்தின் தனித்துவங்கள்!


கோயிலின் பழமை, 1000 முதல் 2000 வருடங்களுக்கு முன்!

பொதுவாகப் பெருமாள் கோவில்களில் ஒன்பது கிரக (நவக்கிரக) சிலைகள் இருக்காது! (மதுரை கூடல் அழகர் ஆலயம் விதிவிலக்கு!) ஒன்பது தலங்களும் ஒன்பது கோள்களுக்கான கோவில்கள். இது, சூரியன் தலம். 


தை முதல் நாளில் பெருமாளுக்கு 108 போர்வைகள் அணிவித்து வணங்குவர். பின் ஒவ்வொரு போர்வையாகக் கலைப்பார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திருத்தலங்களைச் சேர்ந்த பெருமாள் அனைவரும் இந்நாளில் கள்ளபிரான் உருவில் காட்சி தருவதாய் நம்பிக்கை!


அரனின் உறைவிடம் கைலாயம். அரியின் உறைவிடம் வைகுந்தம். அடியார்கள், பிறவாநிலை (மோட்சம்) எய்த இந்த இரு உலகங்களில் ஏதேனும் ஒன்றில் இடம்தர வேண்டுகின்றனர். (நான் வேண்டியதும் அதே!) 


நம்மாழ்வார் பாடல் பெற்ற தலம். (அவர், மண்ணின் மைந்தர்.) ”காண வாராயே” என்று உருகுகிறார்.


புளிங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின்பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே!

ஆழ்வார் பாடல்களுக்கு விளக்கம் எழுதும் தகுதியும், தமிழறிவும் நான் பெறாததால் எழுதுவதில்லை!  ஆழ்வார்களின் அழகுத்தமிழை உங்களோடு சேர்ந்து வியக்கும் முயற்சி என்று கொள்க!


காலையிலிருந்து உணவுகொள்ளவில்லை. கள்ளபிரான் கைவிடவில்லை! பசியோடு பார்க்க வந்தவனுக்குப் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் தந்த கள்ளபிரானை மறக்கவே மாட்டேன்!


6 comments:

 1. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 2. கூகிள்சிறி,

  விரைவில் இணைக்கிறேன். தகவலுக்கு நன்றி. தானியங்கி முறையில் நீங்களாகவே இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 3. எவ்வளவு அழகான படங்கள் ! சூப்பர் !

  ReplyDelete
 4. திண்டுக்கல் தனபாலன்,

  தங்களின் தொடர்ச்சியான பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 5. ஐயா, நான் அடைந்த மகிழ்ச்சியை எழுத்தில் சொல்ல இயலாது ! ஆயிரம் நன்றிகள்..அடியேன் பிறந்து வளர்ந்தது ஸ்ரீ வைகுண்டத்தில். எங்கள் கோவிலின் அழகுகளை புகைப்படத் தொகுப்பாக தந்துள்ளீர்கள். சிற்பங்கள் பேசும் அழகை அனைவரும் கண்டு மகிழும் வாய்ப்பைத் தந்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள். நவதிருப்பதியில் முதல் திருப்பதி ஸ்ரீவைகுண்டம். இங்குள்ள சிவன் கோயில் நவகைலாய கோயில்களில் ஒன்று !
  - கோபால் மனோகர் .

  ReplyDelete
 6. Gopal Manogar,

  அய்யா என்று விளிக்கும் அளவுக்கு நான் பெரியவனல்ல! தங்கள் ஸ்ரீவைகுண்டத்தைப் படமெடுக்கும் வாய்ப்பை நல்கியது கள்ளப்பிரான். மறக்க முடியாத அனுபவத்தைத் தந்த ஆலயம். எனது பசியைப் போக்கிய கள்ளபிரானை எப்படி மறப்பது? நவகைலாயம் காண வேண்டும் என்று ஜூலை மாதம் வந்தேன். ஈசனின் அருள் கிடைக்கவில்லை. மீண்டும் என்னை அழைத்தது உங்கள் கள்ளபிரானே! நவதிருப்பதிகளை மீண்டும் தரிசித்தேன். நவகைலாயத்தைக் கண்டதும் பதிவிடுகிறேன். தங்களின் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி.

  ஸ்ரீ....

  ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!