Pages

Wednesday, January 30, 2013

ஞீலிவனநாதர் - திருப்பைஞ்ஞீலி.

திருச்சி மண்ணச்ச நல்லூருக்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபைஞ்ஞீலி திருத்தலம். (திருப்பஞ்சீலி என்பது தற்போதைய வழக்கு.) பேருந்து வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. ஆலயத்தின் வாசலிலேயே இறங்கலாம்.

இறைவன் - மாற்றறி வரதர், நீலகண்டர், ஞீலிவனநாதர், ஞீலிவனேஸ்வரர்.

இறைவி - விசாலாட்சியம்மை, நீணெடுங்கண்ணி.

பொய்கை - விசாலாட்சிப் பொய்கை.

தலமரம் - வாழை.

பாடியவர்கள் - திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்.

வரலாறு!  தென்கரையிலுள்ள திருச்சிராப்பள்ளி மலைக்கோயில், திருவானைக்கோயில், திருவெறும்பூர், திருக்கற்குடி (உய்யக்கொண்டான் மலை.) மற்றும் திருப்பராய்த்துறை ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு அப்பர் பாதயாத்திரையாக திருபைஞ்ஞீலிக்கு வந்து கொண்டிருந்தார். கடும் வெய்யிலில் பருக்கைக் கற்கள் நிறைந்த பாதையில் பசியும், தாகமும் மேலிடத் தொடர்கிறார் பயணத்தை.

அடியாரின் துயர்களையும் ஈசன் அப்பருக்கு உதவாமல் இருப்பானா? கட்டமுது, பொதிசோற்றுடன் நிழல்தரும் சோலை, நீர்நிலையை உண்டாக்கி அந்தணர் வடிவில் அப்பரை எதிர்கொள்கிறார் சிவன். எங்கு செல்கிறீர்கள் என்று வினவுகிறார் அந்தணர். திருபைஞ்ஞீலி சிவபெருமானைத் தரிசிக்க என்கிறார் அப்பர். உணவருந்தித் தாகம்தணிந்து சற்று இளைப்பாறிச் செல்லலாம் என்கிறார் அந்தணர். அங்ங்கனமே வழிநடை வருத்தம் தணிந்ததும் அந்தணர் அப்பரை ஆலயத்துக்கு அழைத்து வருகிறார். ஆலயத்தின் வாசலில் அந்தணர் மறைந்து சிவபெருமான் பார்வதியுடன் அப்பருக்கு ரிஷப வாகனக் காட்சியளிக்கிறார். இறைவனின் பெருங்கருணையை நினைந்து வியந்து மகிழ்ந்து பாடிப் போற்றுகிறார் அப்பர். பசியாற்றியதால் ஈசனுக்கு சோறுடை ஈஸ்வரர் என்ற திருப்பெயர் உண்டு.

தலத்தின் சிறப்புகள்!

காவிரியின் வடகரையில் விளங்கும் தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்கள் அறுபத்து மூன்று. இத்திருத்தலம் 62 ஆவது.

கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட தொன்மையான தலம்.

சிவம் பெருக்கும் சித்திரை என்று சிறப்பித்துச் சொல்வார்கள். சித்திரை அவிட்டம் அப்பர் பெருமானின் திருநட்சத்திரத்தில் ஆண்டுதோறும் கட்டமுது விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மார்க்கண்டேயனுக்காகத் திருக்கடையூரில் எமனை அழித்தார் சிவன். திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் தவிர மற்ற இடங்களில் பல்வேறு பாதிப்புகள். இங்குள்ள ஈசனிடம் அனைவரும் மன்றாட, எமனை உயிர்ப்பித்து மீண்டும் அழிக்கும் அதிகாரத்தை வழங்கியதால் ஈசனுக்கு அதிகார வல்லவர் என்ற பெயர் வந்தது.

மந்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்
பக்தர் தாம் தொழுதேத்தும் பைஞ்ஞீலிஎம்
அத்தனைத் தொழ வல்லவர் நல்லவரே!

காணவேண்டிய திருத்தலங்களில் ஒன்று திருப்பைஞ்ஞீலி!
 


4 comments:

 1. படங்கள் அருமை . அரசுகள் இந்த மாதிரி வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை நன்றாக பராமரிக்க நிதி உத்வி செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. Gnanam Sekar,

   தங்கள் கருத்து சரியானது. அரசு மற்றும் அன்பர்கள் உதவியை எதிர்நோக்கியிருக்கும் ஆலயங்கள் நிறைய இருக்கின்றன. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   ஸ்ரீ....

   Delete
 2. Replies
  1. Vengat Ragaven,

   Thanks for your visit & comment.

   Sri....

   Delete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!